
2021-22-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை) வட்டி விகிதங்களை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
இதில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதத்தை 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதத்தை 7.1%ல் இருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
மேலும்,ஓராண்டு கால வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், இதைப்போல 2 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 0.5 சதவீதமும், 3 ஆண்டு கால வைப்பு நிதிக்கு 0.4 சதவீதமும், 5 ஆண்டுகால வைப்பு நிதி திட்டங்களுக்கு 0.9 சதவீதமும் குறைக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து,மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகால சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.9 சதவீதம் குறைக்கப்பட்டு 6.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், பி.பி.எப்(PPF), வருங்கால வைப்பு-ஓராண்டுகால வைப்புநிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டவட்டி விகிதம் குறைப்பு வாபஸ் பெறப்படுகிறது என்றும் ,ஏற்கனவே இருந்த வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.