
கொரோனா வைரஸ் தொற்று பரவல் என்பது எதிர்பார்த்த கால அளவைக் காட்டிலும் மிகநீண்ட காலத்திற்கு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என பரிணமித்த வைரஸ் தொற்று பல நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பிற்கு இட்டுச் சென்றுள்ளன.
2019ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொதுமுடக்கங்களும், கட்டுப்பாடுகளும் உலக நாடுகள் பலவற்றிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காக்க உலக நாடுகள் அனைத்தும் ஒரு வலுவான பொதுசுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுதல் , தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுசுகாதாரத்தை முதன்மையான ஒன்றாகவும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கட்டமைப்பையும் உருவாக்குவது கடுமையான சூழல்களில் மக்களைக் காக்க இன்றியமையாத ஒன்றாக அமையும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.