
தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் சட்ட படிப்புகளில் சேர நாளை (04.08.2021) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் உயர் கல்வித்துறை ஆன்லைன் மூலம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என அறிவித்தது.
இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலை அறிவியல் கல்லூரியை தொடர்ந்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட கல்லூரியில் B.A., LLB (HONS), BBA LLB (HONS), LLB (HONS), BCA LLB (HONS) ஆகிய சட்ட படிப்புகளில் சேர நாளை முதல் (04.08.2021) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் 3 ஆண்டு கால LLB இரண்டு ஆண்டு கால படிப்பான LLM போன்ற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட படிப்புகளில் சேர்வதற்க்கான கல்வித் தகுதி மற்றும் கல்வி கட்டணம் போன்ற விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.