
இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் 18 வயது கீழ் உள்ளவரக்ளுக்கு இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில் 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சிறப்பு வல்லுநர் குழுவானது மூன்று கட்டங்களாக நடத்திய பல்வேறு பரிசோதனை தரவுகளை அடிப்படையாகக் கொண்டு 2 வயது முதல் 18 வரையிலான சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த பரிந்துரை செய்துள்ளது.கடந்த 3 மாதங்களாக 2 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவேக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த வல்லுநர் குழு அனுமதி அளித்ததை தொடர்ந்து, மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையமும் அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.