
மே 4 ஆம் தேதி முதல் யாஹூ ஆன்ஸர்ஸ் தளம் மூடப்படும் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.மேலும் அதிலுள்ள விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாஹூ ஆன்ஸர்ஸ் தளமானது 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.சுமார் 16 ஆண்டுகாலமாக இயங்கி வரும் யாஹூ ஆன்ஸர்ஸ்ஸின் அனைத்து பக்கங்களும் தற்போது மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாஹூ ஆன்ஸர்ஸ் இணையதளம் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் படிக்கும் தளமாக மாற்றப்படும் எனவும்,மேலும் யாஹுவின் மற்ற சேவைகள் அல்லது கணக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் யாஹூ ஆன்ஸரில் புதிய தகவல்கள் எதுவும் பதிவேற்றம் செய்யப்படாது ஆனால் அதிலிருக்கும் தகவல்களை பயனாளர்கள் படிக்க இயலும் என கூறப்பட்டுள்ளது.
பயனாளர்கள் யாஹூ ஆன்ஸர்ஸில் இருக்கும் தங்களது தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான கோரிக்கைகைளை வைக்க ஜூன் 30ம் தேதி இறுதிநாள் என கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும்,பயனாளர்கள் கோரிக்கை வைத்த 30 நாள்களில் தங்களது தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக,2021 மே 4ஆம் தேதி முதல் யாஹூ ஆன்ஸர்ஸ் பக்கம் செயல்படாது எனவும், யாஹூ ஆன்ஸர்ஸ் யாஹூ முகப்புப் பக்கத்துக்கு திருப்பி விடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.