
டெல்டா வகை கொரோனா வைரஸானது 96 நாடுகளில் வரும் காலங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பானது அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிகம் பரவியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது. டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு இப்போது 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது, இது கடந்த வாரத்தை விட தற்போது 11 நாடுகள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 29, 2021 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு தனது கொரோனா வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையில் 96 நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவித்து உள்ளன. இருப்பினும் இது மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசைமுறைத் திறன்கள் குறைவாக இருப்பதால் இது குறைத்து மதிப்பிடப்படுகிறது.
சமீபத்திய ஆய்வின்படி, ஆல்பா மாறுபாட்டின் பாதிப்புகள் 172 நாடுகளிலும் 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும் 72 நாடுகளில் காமா வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா (11 புதிய நாடுகள்) வகை பாதிப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.