
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட வருகிறது.இந்தியாவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து வருகிறது.மேலும் கொரோனவால் பலியாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது .
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்திய குடிமையியல் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 24 வகையான தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது.
இந்நிலையில் 712 குடிமையியல் பணியிடங்களுக்கான அறிவிப்பு மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.மேலும் தேர்வானது வருகிற ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனாவின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 27 ஆம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு தற்போது அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .