
ஐ.நா பொதுச்சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது .
ஐ.நா பொது சபையில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக 2023 -ஐ அறிவிப்பதற்கு இந்தியா,ரஷ்யா ,நேபாளம் ,வங்கதேசம் மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்து வந்தன.மேலும் 70 நாடுகள் இதற்கு வழிமொழிந்துள்ளன.
இதனடிப்படையில் ஐ.நா சபை முன்மொழிவின் மீது வாக்கெடுப்பு (புதன்கிழமை) ஒன்றை நடத்தியது .இதன்மூலம் ஐ .நா வின் 193 உறுப்பு நாடுகளும் ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ,2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது .
சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதானியங்களின் ஆண்டாக 2023 அறிவிக்கப்பட்டுள்ளது .
சிறுதானியங்கள் பல நாடுகளில் சாகுபடி செய்து வரும் நிலையில் ,தற்போது சில நாடுகளில் சிறுதானியங்களின் சாகுபடியானது குறைந்து வருகிறது .எனவே சிறுதானியங்களின் நன்மையை உலகிற்கு உணர்த்தும் வகையிலும் ,மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறுதானியங்களின் சாகுபடி அளவை பெருக்கும் வகையிலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது .
மேலும் ,சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்கவும் ,அவற்றின் மீதான முதலீடுகளை அதிகப்படுத்தவும் மற்றும் சிறுதானியங்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதன் மூலமும் சர்வதேச அளவில் சிறுதானியங்களின் வளர்ச்சியானது அதிகரிக்கும் .ஐ.நா வின் இந்த தீர்மானமானது பல்வேறு நாடுகள் சிறுதானியங்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கைகளையும் ,முயற்சிகளையும் எடுப்பதற்கு வழிவகுக்கும் .