
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வயது வரம்பு உயர்த்துவது குறித்து அறிக்கை இன்று தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பள்ளி கல்வித்துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் அதற்கு ஓராண்டு முன்வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால் 59 வயது வரை பணி நியமனம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அதற்கு எதிர்மறையாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த புதிய வயது வரம்பு தற்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2207 முதுநிலை ஆசிரியர் நியமத்திற்கான தேர்வு அறிவிப்பில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் வயது வரம்பினால் இதற்காக பல ஆண்டுகளாக படித்து பட்டங்கள் பெற்று பயிற்சி பெற்று வந்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பு வெளியானால் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.