
காற்று மாசுபாட்டை மதிப்பிடும் வகையில் புதிய செயற்கைக்கோளை அமீரகத்தின்(துபாய்) சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கியுள்ளது. “டிஎம்சாட் 1” என்ற புதிய செயற்கைக்கோள் வருகிற 20 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
“டிஎம்சாட் 1” என்ற புதிய செயற்கைக்கோளின் திட்டப்பணியானது முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் துபாய் மாநகராட்சி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த புதிய செயற்கைக்கோளின் மூலம் , அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் புழுதிக் காற்று மாசுபாட்டை தெரிந்து கொள்ளவும் ,அதற்கேற்ப பொதுமக்களை எச்சரிக்கை செய்யவும்,மேலும் தேவையான முன்னெசரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்த “டிஎம்சாட் 1” செயற்கைகோள் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று மாசுபாட்டின் காரணமாக பொதுமக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக “டிஎம்சாட் 1” செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“டிஎம்சாட் 1″ செயற்கைக்கோள் வருகிற 20-ந் தேதி அமீரக நேரப்படி காலை 10.07 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இதன் எடை சுமார் 15 கிலோ ஆகும்.”டிஎம்சாட் 1” செயற்கைக்கோள் பூமியில் இருந்து 730 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுவதாக துபாய் மாநகராட்சி சுற்றுச்சூழல் துறையின் இயக்குனர் அலியா அல் ஹர்மூதி தெரிவித்துள்ளார்.