
உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கிய நிலையில் ,தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதிய வகை உருமாறிய கொரோனா வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மாற்றங்களை கொண்டுள்ளது என்றும் முன்பிருந்த கொரோனா வகைகளை காட்டிலும் வித்தியாசமான ஒன்றாக உள்ளது என்று தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் உயிர் தகவலியல் பேராசிரியராக பணிபுரிந்துவரும் துலியோ டி ஒலிவேரா தெரிவித்துள்ளார்.
புதிய வகை கரோனாவால் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் பாதிக்கப்பட்டிருப்பதை கிருமியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.