
தமிழகத்தில் வரும் 6-ந் தேதி 8-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 91 லட்சத்து 18 ஆயிரத்து 663 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 31 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 7 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 1 கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து வரும் (6-ந் தேதி) சனிக்கிழமை, தமிழகத்தில் 50 ஆயிரம் முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. 2-வது தவணை ‘கோவேக்சின்’ தடுப்பூசி 13 லட்சம் பேருக்கும், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி 48 லட்சம் பேருக்கும் செலுத்த வேண்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி 8-வது முகாம் மூலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 8 வாரமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றாலும், இன்னும் தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதன் அடிப்படையில்தான் வீடுகளுக்கே தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது.