
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 42 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டிருந்தநிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றை விட குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 35,342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,12,93,062 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 483 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,04,68,079 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,19,470 ஆகும்.நேற்று ஒரே நாளில் 38,652 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,05,513 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 42.34 கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.