
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.தற்போது சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் , 89 ஆயிரத்து 187 இடங்கள் நிரம்பி இருந்தன. இதையடுத்து மீதம் உள்ள இடங்களை நிரப்புவதற்கு துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 20-ந்தேதி (நேற்று) முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவித்திருந்தநிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுவதோடு, கலந்தாய்வும் இன்றே தொடங்க இருக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (சனிக்கிழமை) தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். அதனை அன்றைய தினமே உறுதி செய்வதற்கும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இறுதியாக 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதி ஒதுக்கீட்டு ஆணையுடன் துணை கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.