
மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாட்டிற்காகப் அரும்பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
போட்டித்தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்பெறும். போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே 2 பேர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்ப வேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்களே 2 பேர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்ப வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி முற்பகல் 10 மணிமுதல் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பிற்பகல் 2 மணிமுதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.