
இந்தியாவில் தற்போது கொரோனாவின் எண்ணிக்கையானது தொடர்ந்து 1.50 லட்சத்தை தாண்டிய நிலையிலேயே இருக்கிறது.நாடெங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடையாமல் தடுக்க மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் இதுவரை 10 கோடி பேருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் ஸ்புட்னிக் V தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது.பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டங்களின் தொடர்ச்சியாக திங்கட்கிழமை(நேற்று) மத்திய நிபுணர்கள் குழு கூடி ஸ்புட்னிக் V தடுப்பூசி மருந்தை அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்தது.
ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி இணைந்திருக்கிறது.ரஷ்யா ஸ்புட்னிக் தடுப்பூசியை ரெட்டி நிறுவனம் மட்டுமின்றி, கிளாண்ட் ஃபார்மா, பனாக்கியா பயோடெக், விர்செள பயோடெக், ஸ்டெலிஸ் பயோஃபார்மா ஆகிய நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து 852 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஸ்புட்னிக் -வி:
ஸ்புட்னிக் என்ற பெயர் வைக்க காரணம்,ரஷ்யா தனது முதலாவது செயற்கைக்கோளுக்கு இடப்பட்ட பெயரான ஸ்புட்னிக் என்ற பெயரை COVID தடுப்பூசிக்கு வைத்துள்ளது.ஸ்புட்னிக்தான் உலகிலேயே முதலாவது செயற்கைக்கோளாகும்,இதனடிப்படையில் தடுப்பூசிக்கும் ஸ்புட்னிக் V என்ற பெயரை சூட்டியுள்ளது ரஷ்யா.
தற்போது,இந்தியாவில் ஸ்புட்னிக் V தடுப்பூசியை தயாரிக்க ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் என்ற அமைப்புடன் ஹைதராபாதைச் சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்ற கரோனா தடுப்பூசி 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகளாக செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 91.6% செயல்திறன் கொண்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகாலத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.