
பகுதி நேர பி.இ, பி.டெக். படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர பி.இ, பி.டெக். படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 22-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தகுதியான மாணவர்கள் வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.சிறப்புப் பிரிவினருக்கு செப்டம்பர் 26ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கு 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும். செப்டம்பர் 30-ம் தேதி சேர்க்கைக்கான கடிதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர பி.இ, பி.டெக். முதலாமாண்டு படிப்புக்கு இதுவரை 800-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பப் படிவங்களைப் பதிவு செய்யலாம் என்று பகுதி நேர பி.இ. பி.டெக். மாணவர் சேர்க்கைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நடப்புக் கல்வியாண்டிற்க்கான (2021-22) பகுதி நேர முதலாமாண்டு பி.இ, பி.டெக். பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் பணி கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணி வரை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம், பர்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோவையிலுள்ள கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதி நேர பி.இ. பி.டெக் பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.