
செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா பெர்சிவரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பியது.
சுமார் 293 மில்லியன் மைல்கள் என்ற மிக நீண்ட பயணத்தை கடந்து செவ்வாய்க்கிரகத்தில் உள்ள ஜெஸிரோ பள்ளத்தில் (Jezero Crater) கடந்த பிப்ரவரி 18-ம் தேதி பெர்சிவரென்ஸ் ரோவர் தரையிறங்கியது.இந்த நிலையில், நாசாவின் ரோவர் செவ்வாய் வளிமண்டலத்திலிருந்து சில கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது. முதன் முறையாக பூமியை தவிர்த்து வேறொரு கிரகத்தில், கார்பன் டை ஆக்சைடு ஆக்சிஜனாக மாற்றப்படுவது இதுவே முதன்முறை என்று நாசா தெரிவித்துதுள்ளது.
நாசாவின் புதிய வரலாற்று சாதனை :
உலக வரலாற்றில் முதன் முறையாக செவ்வாய்க்கிரகத்தில் கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றியது ஒரு முக்கியமான நிகழ்வு என நாசா தெரிவித்துள்ளது. இந்த புதிய முயற்சியின் மூலம் எதிர்கால மனித ஆய்வுக்கு வழி வகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டின் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜனை உருவாக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும்,வேற்று கிரகத்திலிருந்து ராக்கெட் பூமிக்கு திரும்பும் போது, அதன் உந்துசக்தியாக ஆக்சிஜனை பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாக்ஸி என்றால் என்ன ? மற்றும் அவற்றின் செயல்பாடுகள்?
மாக்ஸி என்பது செவ்வாய்க்கிரகத்தில் அதிகம் காணப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதே மாக்ஸியின் முக்கிய பணியாகும்.செவ்வாய்க்கிரகத்தில் வளிமண்டலத்தின் ஆக்ஸிஜனின் அளவு மிக மிகக் குறைவு. செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலமானது 95 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்ஸைடை கொண்டிருக்கிறது. மீதம் இருக்கும் 5 சதவிகிதத்தில் நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயுக்கள் அதிகளவில் நிறைந்திருக்கிறது.
மாக்ஸியில் எலக்ட்ரோலைஸிஸ் முறையில் அதீத வெப்பத்தில் கார்பன-டை-ஆக்ஸைடு மூலக்கூறுகளில் இருந்து ஆக்ஸிஜன் அணுக்களை மாக்ஸி பிரித்தெடுக்கும்.கடந்த ஏப்ரல் 20-ம் தேதி முதல் செவ்வாயில் மாக்ஸியின் சோதனை துவங்கியது. முதல் சோதனையில் சுமார் 5 கிராம் அளவிலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தது மாக்ஸி. 5 கிராம் என்பது மனிதன் சராசரியாக 10 நிமிடங்களில் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு. மாக்ஸியானது ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் அளவிலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறனோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாக்ஸியின் முதன்மை ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஹெக்ட் (Michael hecht) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
MOXIE-ன் ஒரு டன் மூலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு ராக்கெட்டுக்கு தேவையான சுமார் 55,000 பவுண்டுகள் (25 டன்) ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். மேலும்,25 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜனை பூமியில் இருந்து விண்கலத்துக்கு அனுப்புவதை விட, 1 மெட்ரிக் டன் அளவிலான ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் கருவியை அனுப்புவது எளிது எனத் தெரிவித்திருக்கிறார்.