
துணை மருத்துவப் படிப்புகளுக்கான பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம். உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று திங்கள்கிழமை தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்., ரேடியோகிராபி உள்ளிட்ட மருத்துவம் சாா்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படிப்புகளுக்கான நடப்பு கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளத்தில் பதிவு செய்வது இன்று திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மேலும் நவம்பா் 8-ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் http://tnhealth.tngov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளா், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியாா் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவம்பா் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.