
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலையில் ,தற்போது உருமாற்றம் பெற்றிருக்கும் கொரோனா தீநுண்மி ஒமிக்ரான் என்ற பெயரில் புதிய உருமாற்றத்தை அடைந்துள்ளது.
தற்போது உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸானது 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக கூறப்படுகிறது.தற்போது இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம, இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவிவிட்டது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒமிக்ரான் வைரஸானது தற்போது இங்கிலாந்திலும்,ஜெர்மனியிலும், இத்தாலியிலும் கால் பதித்துவிட்டது.இங்கிலாந்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு வருகிற அனைவரும், இரண்டாவது நாளில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என வருகிற வரையில், சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
ஒமிக்ரான் வைரசுக்கு ஏற்ற வகையில் தங்கள் தடுப்பூசியை மாற்றியமைத்து புதிய தடுப்பூசியை 100 நாளில் கண்டுபிடிக்க முடியும் என்று பைசர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதேபோன்று அஸ்ட்ரா ஜெனேகா, மாடர்னா, நோவாவேக்ஸ் நிறுவனங்களும் ஒமிக்ரான் வைரசுக்கு ஏற்ற விதத்தில் தங்கள் தடுப்பூசியை மாற்றியமைக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளன.