
தெற்கு வங்க கடலில் சனிக்கிழமையன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது .தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது .இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் அபாயம் உள்ளது .இந்த புயலுக்கு ஈரான் நாடு பரிந்துரைத்த “நிவர் “என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது .
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளை நோக்கி புயலானது நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலானது நவம்பர் 25 (புதன்கிழமை) ஆம் தேதி பிற்பகல் 2 .30 மணியளவில் காரைக்கால் – மஹாபலிபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கக் கூடும் என எதிர்பார்க்கபப்டுகிறது .
நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சுமார் 20 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது .
சுமார் 40 முதல் 100 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது .நிவர் புயலானது தற்போது நிலவரப்படி சென்னியிலிருந்து 630 கி.மீ தொலைவிலும் ,புதுச்சேரியிலிருந்து சுமார் 600 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது .
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
நிவர் புயல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் ,அரக்கோணத்தில் இருந்து 6 தேசிய பேரிடர் மீட்புக்குழு கடலோர மாவட்டங்களுக்கு விரைந்து அனுப்பப்படுகிறது எனவும் ,மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அரசு முகாம்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது .மேலும் ஏரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது .