
வானிலை மற்றும் கடல் வெப்ப நிலையை ஆராயும் வகையில் புதிய செயற்கைக்கோளை சீனா இன்று விண்ணில் செலுத்தியுள்ளது.சீனாவில் உள்ள ஜூகுவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் உலகளாவிய சுற்றுச்சூழல் மாசுபாடு, பனிப்பொழிவு, கடல் வெப்பநிலை மற்றும் வானிலை மாற்றத்திற்கு எதிரான பேரிடர் போன்றவற்றை முன்கூட்டியே அறிய உதவும் என்று சீனாவின் ஜூகுவான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 செயற்கை உணர்திறன் கருவிகள் கொண்ட எப்.ஒய். -3 (FY-3) இ என்ற வானிலை ஆய்வு செயற்கைக்கோள், எட்டு ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த செயற்கைக்கோள் சுற்றுச்சூழல் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வானிலை சார்ந்த மற்ற தகவல்களை துல்லியமாக அனுப்பும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனா, வானியல் சார்ந்த நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக அறிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.