
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளும் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.மேலும், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 3 வகையாக பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த்தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தளர்வுகளுடன் கூடிய கூடுதல் செயல்பாடுகள் :
- புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத்தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உணவகங்கள், டீக்கடைகள், அடுமனைகள் (பேக்கரி), நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
- நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.
- கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.