
கல்வி தொலைக்காட்சி மூலம் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய பாடங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ ,மாணவிகளுக்கு புதிய வகுப்புகள் கல்வி தொலைக்காட்சி மூலம் தொடங்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும் , தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று ஏற்ற இறக்கமாகவே உள்ளது. எனவே, கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை போலவே நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் ஆன்லைன் மூலமே தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டில் கல்வி தொலைக்காட்சி மூலமும், அந்தந்தப் பள்ளி ஆசிரியர்கள் சிலரால் வாட்ஸ்-அப் மூலமும் மாணவர்களுக்கான பாடங்கள் கற்பிக்கப்பட்டன.கடந்த ஆண்டு போலவே நடப்பாண்டும் கல்வி தொலைக்காட்சி மூலமாக இன்று (சனிக்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி அலுவலகத்தில் இதற்கான பணியை முதல்-அமைச்சர் இன்று தொடங்கிவைக்கிறார்.
நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அதற்கான அட்டவணையும் இன்று வெளியிடப்படுவதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும்போது அதை புரிந்துகொள்வதற்கு பாடப்புத்தகங்கள் அவசியமாகிறது.இதன் காரணமாக விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியையும் முதல்-அமைச்சர் இன்று தொடங்கிவைக்கிறார்.மேலும் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்தப் பள்ளிகள் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.