
டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் விடைத்தாள் நகலை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் முழு வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திடவும், பணி நியமனம் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக தேர்வாணையம் புதிய இணையதள முறை ஒன்றை உருவாகியுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டஅறிக்கையில்,தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள் தற்போது இணையதளத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி, தங்கள் விடைத்தாள்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் முதல் கட்டமாக, 2019 மார்ச்சில் நடந்த, ‘குரூப் – 1’ முதல் நிலை தேர்வு, அதே பதவிகளுக்கு, 2019 ஜூலையில் நடந்த முதன்மை தேர்வு ஆகியவற்றின் விடைத்தாள் நகல்கள், இன்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
தேர்வாணைய வரலாற்றில், இணையதளத்தில், தேர்வர்களின் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்வது இதுவே முதல் முறை.தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அவரவர் ஒருமுறை பதிவு வழியே, கட்டணம் செலுத்தி விடைத்தாள்களை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.