
நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. மேலும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. நீட் தேர்வு நடைபெறும் தினத்தில் வேறு படிப்புக்கான தேர்வுகளும் இருப்பதால் தள்ளி வைக்க வேண்டும் மனுவில் குறிப்பிட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் என்றும் ஒருசில மாணவர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க அதனை ஒத்திவைக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். தேவையெனில் மனுதாரர்கள் தேசிய தேர்வுகள் முகமையிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். இதனால் திட்டமிட்டப்படி செப்டம்பர் 12ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.