
பெண் தேர்வாளர்களுக்கான தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி விண்ணப்ப படிவம் யு.பி.எஸ்.சி. இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு படை அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில் (II), பெண்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி திருமணம் ஆகாத பெண்கள் மட்டும் இந்த தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப வசதியை தனது இணையளத்தில் (upsconline.nic.in) ஏற்படுத்த மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) முடிவு செய்துள்ளது.
இதற்காக கடந்த ஜூன் 9ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு எண் 10/2021-NDA-II-ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த திருத்த அறிவிப்பு மத்திய அரசு தேர்வாணை இணையளத்தில் (www.upsc.gov.in) உள்ளது. பெண் விண்ணப்பதாரர்களுக்கு, இந்த ஆன்லைன் விண்ணப்ப வசதி, 24.09.2021-லிருந்து, 8.10.2021 (மாலை 6 மணி வரை) திறந்திருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ் கல்ரா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிப்பது சற்று சிரமமான காரியம் மற்றும் கால அவகாசம் தேவை என்று கூறியிருந்தது.மத்திய அரசின் கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, இவ்வருடத்துக்கான தேர்வு வரும் நவம்பரில் நடக்கவுள்ள நிலையில், அதிலேயே பெண் தேர்வர்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுகள்(II) 2021க்கு, பெண்கள் கலந்துக்கொள்ளலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இத்தேர்வில் கலந்துக்கொள்ள விரும்பும் பெண்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கூறி அதற்கான விண்ணப்பப் படிவத்தை தற்போது வெளியிட்டுள்ளது.