
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்க்காக 2 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது.
வெள்ளி கிரகத்தின் தட்ப வெப்பம் மற்றும் புவியியல் தன்மையை ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் இருக்கும் கோள்களில் ஒன்றான வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 500 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்குவதாக நாசா அறிவித்துள்ளது.
2028 முதல் 2030-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்,நாசாவின் கண்டுபிடிப்பு திட்டத்தின் கீழ் வரும் இரு திட்டங்களையும் ஆய்வு மேற்கொள்ள சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,650 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாசாவின் இரு திட்டங்களுக்கு டாவின்சி, வெரிட்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகம் எப்படி தோன்றியது? அங்கு கடல் இருந்ததா?, கிரகத்தின் புவியியல் வரலாறு குறித்தெல்லாம் டாவின்சி திட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெரிட்டாஸ் திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகத்தின் புவியியல் வளர்ச்சியையும், பூமிக்கும் வெள்ளி கிரகத்திற்க்கான வேறுபாடுகளையும் ஆராய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.