
இந்தியா முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவம் நாட்டு மக்களையே அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் கொரோனவிலிருந்து மீண்டவர்களுக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படுகிற கருப்பு பூஞ்சைநோய் தாக்குவது மேலும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இது மற்றுமொரு அரிதான தொற்றுநோயாகும்.
‘மியூகோர்மைகோசிஸ்’ :
*மியூகோர்மைகோசிஸ் என்பது பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த நோயானது உயிரைக் காக்க தருகிற ஸ்டீராய்டு மருந்துகளால் தூண்டப்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*மியூகோர்மைகோசிஸ் நோயானது சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்கும் தன்மை கொண்டது.மேலும் இவை உயிருக்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
*கொரோனா நோயாளிகளின் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதே மியூகோர்மைகோசிஸ் நோய்க்கு காரணமாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
மியூகோர்மைகோசிஸ் நோய் குறித்து மத்திய உரம் மற்றும் ரசாயனங்கள் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
கொரோனா நோயாளிகளுக்கு மியூகோர்மைகோசிஸ் என்கிற கருப்பு பூஞ்சைநோய் பெரும் சிக்கலாக அமைகிறது.தற்போது இந்த மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது.இந்த நோய்க்கு ஆம்போடெரிசின்-பி என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மேலும் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உற்பத்தியாளர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறது.
ஆம்போடெரிசின்-பி என்ற மருந்தை நியாயமான விதத்தில் பயன்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்து வினியோகத்தை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது.