
கொரோனா பெருந்தொற்றால் உலக அளவில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டும், உருவாக்கப்பட்டும் வருகிறது.
தற்போது இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும். மேலும், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 95 சதவீதம் பேருக்கு பலனளித்துள்ளது.மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால (28 நாட்கள்) இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.