
ஜேஇஇ முதல்நிலை 4-ம் கட்ட தேர்வுகள் கணினிவழியில் ஆகஸ்ட் 26, 27, 31, செப்டம்பர் 1, 2-ல் நடக்க உள்ளன.இந்நிலையில், ஹால் டிக்கெட்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். மேலும் இந்த தேர்வானது முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்க்கான முதல்நிலை தேர்வு, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான முதல் மற்றும் 2-ம்கட்ட தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டது. மேலும் ஏப்ரலில் நடக்க இருந்த 3-ம் கட்டதேர்வு, கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு ஜூலை 20 முதல் 27 வரை நடத்தப்பட்டு, ஆக.6-ல் முடிவுகள் வெளியிடப்பட்டது.
மாணவர்கள் தங்களது நுழைவுச் சீட்டினை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.