
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03(EOS3) என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இதனை ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட்டில் பொருத்தி இன்று (வியாழக்கிழமை) காலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
ராக்கெட்டுக்கு உந்து சக்தியாக உள்ள எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து. தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 14 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று பிற்பகல் 3.43 மணிக்கு தொடங்கியது. முன்னதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு இன்று காலை ராக்கெட் விண்ணை நோக்கி சீறிபாய்ந்தது.
இந்நிலையில் திடீரென மூன்றாவது நிலையில் கோளாறு ஏற்பட்டதால் செயற்கைகோளை கொண்டு செல்லும் இலக்கு எட்டப்படவில்லை.
மேலும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சிக்கலால் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.