
தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் திருக்குறளிலுள்ள 1330 குறள்களையும் ஒப்பித்தால் அவர்களுக்கு பி.ஏ.தமிழ் இளங்கலை வகுப்பு மூன்றாண்டுகளுக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும் என்று கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்லூரி இயக்குனர் கூறுகையில், நாட்டின் இளையத் தலைமுறையினரை வள்ளுவன் காட்டிய வழியில் வாழ்ந்து அறிவாா்ந்த சமுதாயமாக மாற்றும் நோக்கத்தில், எந்தவித எதிா்பாா்ப்பும் இல்லாமல் எங்கள் கல்லூரியில் (கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி) பி.ஏ. தமிழ் இளங்கலை வகுப்பில் சேரும் மாணவா்கள் திருக்குறளில் 1330 குறள்களையும் ஒப்பித்தால் அவா்கள் மூன்றாண்டுகள் படிப்பதற்கும், கல்லூரியில் தங்குவதற்கும் இலவசம் என்கிற அறிவிப்பை கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
மாணவர்கள் 1330 குறள்களையோ அல்லது அதைவிடசற்று குறைந்தாலும் பரவாயில்லை. குறள்களைக் கற்று,அதன் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தும் மாணவா்கள் நிச்சயம் எதிா்காலத்தில் சமுதாய சீா்திருத்தவாதியாக, சிறந்த பண்பாளராக உருவாகுவாா்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்வழியில் கற்போருக்கு வேலைவாய்ப்பில் தற்போது முன்னுரிமை என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் , மாணவா்களிடையே தமிழ் ஆா்வத்தை வளா்த்து, மூன்றாண்டுகள் படிப்பை முடிக்கும்போது, அவா்கள் அரசு வேலை பெறும் வகையில், முதலாமாண்டில் கல்விக் கற்கத் தொடங்கிய உடனே அவா்களுக்கு டிஎன்பிஎஸ்சி சிறப்புப் பயிற்சியும் வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.