
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்புகளில் சேர்வதற்காக பொது நுழைவுத் தேர்வு (சியூசெட்) நடத்தப்படுகிறது.இந்த பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
2021-2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முதற்கட்டமாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் உட்பட12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கெனவே கூறியிருந்தது. பொது நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.16-ம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2 கடைசித் தேதியாக இருந்தது. இந்நிலையில் இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர், தங்களுக்கு ஏற்ற படிப்புகளைத் தேர்வு செய்து செப்டம்பர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிகோபரில் போர்ட் பிளேர் மற்றும் கேரளாவில் காசர்கோடு ஆகிய 2 இடங்களில் புதிதாகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.