
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பொறியியல் படிப்பில் நேரடியாக 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
பட்டய படிப்பு (டிப்ளமோ) மற்றும் பட்ட படிப்பு (பிஎஸ்சி) போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் நேரடி 2 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் நேரடி 2 ஆம் ஆண்டு சேர்க்கையானது ஆகஸ்ட் 10 முதல் 30ம் தேதி வரை www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி ஜூலை 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர்கள் பதிவு கட்டணத்தை இணைய வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும். இணையம் மூலம் செலுத்த முடியாதவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் மூலம் வரைவோலையை சமர்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவுகள் முடிந்த பிறகு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும். மேலும் பொறியியல் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04565-230801, 04565-224528 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.