
நடப்பு கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு கடந்த ஜூலை 26-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிறைவு பெற்றது.
இந்நிலையில் தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த 2,060, விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,190, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,124, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்த 182 மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நாளை (15-ந் தேதி) தொடங்குகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் முதல் இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 18-ந் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் அனுமதி கடிதங்களை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கமாகும்.இதன்மூலம் காலியாகும் இடங்கள் காலியாகவே இருக்கும்.ஆனால் இந்த ஆண்டு இடங்கள் காலியாவதை பொறுத்து 5 முறை கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன.இதன்படி , ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.