
மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது.கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து , ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். சுமார் 60 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.இந்த கல்லூரிகளில் படித்து வரும் 2, 3, 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்கின.
மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் கடைபிடிப்பதை கல்லூரிகள் தீவிரமாக கவனிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது .தமிழகத்தில் 28 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் அனைவரும் நேரடி வகுப்பிற்கு வருகை புரிந்தனர்.