
கொரோனா வைரஸின் தாக்கமானது உலகையே அச்சுறுத்தி வருகிறது.இந்த வைரஸ் தொற்று ஆனது பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து வருகிறது.முதல் முதலில் கொரோனா வைரசின் உருமாற்றம் ‘ஆல்பா’ என்று கண்டறியப்பட்டது. இதுதான் பல நாடுகளிலும் பரவியது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவத் தொடங்கியது.இதில் கடும் பாதிப்புகளும்,உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.இதற்கு உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் காரணம் என்பது தெரியவந்தது. B 1.617 என்ற இந்த வகை வைரஸ் இந்தியாவில்தான் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த உருமாறிய வைரஸ் தடுப்பூசி மற்றும் கொரோனா மூலம் உருவான நோய் எதிர்ப்பாற்றலை தாக்கி தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த உருமாற்றத்தை எடுத்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களில் டெல்டா 80 சதவீதம் உருமாறி இருக்கிறது. ஆல்பா வைரஸைவிட டெல்டா மிக தீவிரமான பாதிப்புகளை உருவாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த உருமாறிய டெல்டா வைரஸ் வேகமாக பரவுவது மட்டுமல்ல உடலில் உள்ள செல்களில் வேகமாக ஊடுருவும் தன்மை கொண்டது. இது,மேலும் 2 வகை பிறழ்வுகளை ஏற்படுத்தி கொள்கிறது. இவை இரண்டும் உடலை தாக்குவதற்கு உதவி செய்கின்றன. நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும் வாய்ப்பு அதிகம்.
எடுத்துக்காட்டாக, ஆல்பா தாக்கிய ஒருவரிடம் இருந்து 4 முதல் 5 பேருக்கு பரவும். ஆனால் டெல்டா வகை 5 முதல் 8 பேருக்கு பரவும். மேலும் தொற்று ஏற்பட்ட 3 முதல் 4 நாட்களில் 12 சதவீதம் நோயாளிகளின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிடுகிறது. ஆனால் ஆல்பா வைரஸ் வகை தாக்கத்தின் போது இந்த பாதிப்பு 2 முதல் 3 சதவீதமாகத்தான் இருந்ததாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.