
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதில் ஜேஇஇ மெயின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஜேஇஇ மெயின் தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது.
தற்போது,நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியதையடுத்து ஜேஇஇ மெயின் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜேஇஇ மெயின் மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 20 முதல் 25 வரையும், நான்காம் கட்ட தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காம் கட்ட தேர்வை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று அறிவித்துள்ளார்..
மூன்றாம் கட்ட தேர்விற்கும், நான்காம் கட்ட தேர்விற்கும் இடையே குறைந்தது 4 வாரங்கள் இடைவெளி தேவை என தேசிய தேர்வுகள் நிறுவனம் அறிவுறுத்தியது.இதன் காரணமாக ஜேஇஇ நான்காம் கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 தேதிகளுக்கு மாற்றப்படுவதாக மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஜேஇஇ நான்காம் கட்ட தேர்விற்கு இதுவரை 7.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், விண்ணப்பத்திற்கான கடைசி நாளாக ஜூலை 20 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.