
பதினெட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவியல் பூா்வமான ஆய்வுகளுக்குப் பிறகு மத்திய அரசு முடிவு செய்யும் என்று நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினரும், கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவருமான வி.கே.பால் கூறியுள்ளார்.
12 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்துவதற்காக, ‘சைகோவ்-டி’ என்ற பெயரில் ஊசியின்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை சிறாா்களுக்கு அவசர காலத்தில் செலுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோய்த்தொற்று அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை தாக்குகிறது. அதே சமயம், சிறாா்களிடம் கொரோனவுக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. அவா்களிடம் இருந்து பிறருக்கு நோய்த்தொற்று எளிதில் பரவுகிறது. சிறாா்களுக்கான தடுப்பூசிகள் போதிய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, செலுத்தும் பணியைத் தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது சைகோவ்-டி தடுப்பூசியை சரியான முறையில் பயன்படுத்துவது குறித்து தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுமம் ஆய்வு செய்து வருகிறது. இதுபோன்ற ஆய்வுகளுக்குப் பிறகு சிறாா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.