
இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகிறது.தற்போது சீனாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜைகோவ்-டி (ZyCov-D) என்ற கொரோனா தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்த மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.இந்த ஜைகோவ்-டி தடுப்பூசியானது மூன்று டோசுகள் கொண்டதும், பிரத்யேக சிரிஞ்ச் வாயிலாக போடக்கூடியதுமாகும்.
12 வயதிற்கு மேற்பட்ட சிறாருக்கான ஜைகோவ்-டி தடுப்பூசியின் விலை முடிவு செய்யப்பட்டு விட்டதால்,மிக விரைவில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்த தடுப்பூசியின் விலை, அதன் தயாரிப்பாளர்கள் கேட்ட விலையை விட குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை விட விலை அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுவதோடு,புற்றுநோய், சுவாசம், நரம்பியல், வாத நோய், இதயம், கல்லீரல், இரைப்பை குடல், பிறப்புறுப்பு மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகள் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் குழந்தைகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி இதுவே ஆகும்.