
இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி வருகிற செப்டம்பர் மாதம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தேசிய வைராலஜி மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 18 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பாரத் பயோடெக்கின் கோவேக்சின், சைடஸ் காடில்லா நிறுவனத்தின் ‘சைகோவ்-டி’ ஆகிய இரு தடுப்பூசிகளும் பரிசோதனையில் இருந்து வருகின்றன. இதில், கோவேக்சின் 525 பேரிடமும், சைகோவ்-டி தடுப்பூசி 1,000 பேரிடமும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக்கின் நிர்வாக இயக்குனர் கூறுகையில் , ‘2 முதல் 18 வயதுடைய தன்னார்வலர்களிடம் கொரோனா பரிசோதனை முழுவதும் முடிவடைந்துள்ளது. குழந்தைகளுக்கான கொரோனா வைரஸ் தடுப்பூசி இம்மாத(ஆகஸ்ட்) இறுதி அல்லது அடுத்த (செப்டம்பர்) மாதத்திற்குள் அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
தேசிய வைராலஜி மையத்தின் இயக்குநர் ப்ரியா ஆப்ரஹாம், பரிசோதனை இறுதி முடிவுகள் விரைவில் வெளிவர இருக்கின்றன. முடிவுகளின் அடிப்படையில் விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும். மேலும் குழந்தைகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோவேக்சின், சைகோவ்-டி ஆகிய இரு தடுப்பூசிகள் அங்கீகாரத்துக்காக தற்போது விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் இரு தவணை தடுப்பூசி போட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படும் என்று தெரிவித்தார்.