
நாடு முழுவதும் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியது. மே மாதம் மத்தியில் கொரோனா 2-வது அலை உச்சத்தை தொட்டது.கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும்,முயற்சிகளையும் எடுத்து வந்தது .இதன் காரணமாக கொரோனா தொற்று மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியது.
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா 3-ம் அலை பரவத் தொடங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.மேலும் பல்வேறு மருத்துவ நிபுணர்களும் தொடர் எச்சரிக்கையையும் ,கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொரோனா மூன்றாம் அலை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் கூறுகையில்,
கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது ஆரம்ப நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.மேலும் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு காரணமாகும் என்றும் கூறியுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே ஒரே வழி என்றும் கூறியுள்ளார்.மேலும் வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் ஒவ்வொரு நாட்டிலும் குறைந்த பட்சம் 10 சதவீத மக்களுக்காவது தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் 40 சதவீதம் பேருக்கும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் கொரோனா 3-ம் அலை தாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.கொரோனா 3-ம் அலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரண்தீப் குலேரியா கூறுகையில் ,
கொரோனா 3-ம் அலை உருவாவதற்கு நோய் எதிர்ப்பு திறன் குறைதல், அதிக பரவல் திறன் கொண்ட கொரோனா வைரஸ் உருமாற்றம் பெறுதல், பொது முடக்க தளர்வுகள் ஆகியவையே காரணங்களாக அமையும் என்று கூறியுள்ளார்.மேலும் கொரோனா 2-வது அலையை விட 3-ம் அலையின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்று ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் உள்பட பல்வேறு அமைப்புகள் எச்சரித்து வருகின்றனர்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மூலம் கொரோனா 3-ம் அலையின் பாதிப்பை குறைக்க முடியும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரண்தீப் குலேரியா கூறியுள்ளார்.