
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்களின் மத்தியில் தற்போது கருப்பு பூஞ்சை வேகமாக பரவி வருவது மேலும் அச்சத்தை கொடுக்கிறது.கருப்பு பூஞ்சையானது கட்டுப்பாட்டில் இல்லாத அளவுக்கான நீரிழிவு நோயாளிகள், அதிக அளவு ஸ்டீராய்டு உள்ள நோயாளிகளை, அதிகம் தாக்கும் அபாயம் உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு,அதனால் ஆக்சிஜன் உதவி பெறுபவர்களுக்கு, ஸ்டீராய்டு மருந்துகள் அதிகம் எடுத்துக்கொள்வதன் காரணமாக அவர்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது.
கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் ?
- கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு நோயாளிகள், கீட்டோஅசிடோசிஸ் எனக் கூறப்படும் போதிய அளவு இன்சுலின் சுரக்காமல் அதிக சுகர் பிரச்சினையால் அவதிப்படுவோர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- ஸ்டெராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் கரும்பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் :
- மூக்கிலிருந்து ரத்தம் வருவது கரும்பூஞ்சை நோய் தாக்குதலுக்கான அறிகுறியாகும்.
- மூக்கடைப்பு, தலைவலி அல்லது கண் வலி, கண்ணை சுற்றி வீக்கம், இரட்டை பார்வை, கண்கள் சிவப்பாக மாறுவது, கண் பார்வை மங்குதல் , கண்களை மூட கஷ்டப்படுவது, கண்களை திறக்க முடியாமல் அவதிப்படுவது போன்றவை கருப்பு பூஞ்சையின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
- மேலும்,முகத்தில் உணர்ச்சி குறைவது அல்லது முகத்தில் கூச்ச உணர்ச்சி இருப்பது ஆகியவையும் அறிகுறிகளாக இருக்க கூடும். வாயை திறக்க கஷ்டப்படுவது, வாயால் மெல்ல முடியாமல் கஷ்டப்படுவது, பல் விழுவது, வாய்க்கு உள்ளே வீக்கம் அல்லது கருப்பாக இருப்பது போன்றவை கருப்பு பூஞ்சையின் அறிகுறிகளாகும்.