
தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேர்வதற்க்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்களின் கட் – ஆப் உயர்ந்து, அதிக மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர். இதன் காரணமாக தரவரிசைப் பட்டியலில் ஒரே மதிப்பெண்களை ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பெறுவதற்கு வாய்ப்புள்ளதால், எழும் சிக்கலைத் தவிர்க்க புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி கணிதம், இயற்பியல், Optional பாட மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண்கள், 10-ம் வகுப்பு மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக மாணவர் சேர்க்கைக்கு கணிதம், இயற்பியல் பாட மதிப்பெண்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஆனால் தற்போதைய புதிய வழிகாட்டுதல்கள் படி வேதியியல் பாட மதிப்பெண்களை கணக்கில் கொள்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கூடுதலாக 10-ம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வழிமுறைகளின் படி, பொறியியல் கலந்தாய்வை சிக்கலின்றி நடத்த வேண்டும் என்று பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.