
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள், இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலம் தேர்வானது நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள்.இவர்களில் 2 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியானது.மேலும் ஏராளமான மாணவர்களுக்கு பல்வேறு குளறுபடிகள் காரணமாக முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில் , ‘பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் பெறப்பட்டது.மேலும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, மற்ற பல்கலைக்கழகங்கள் போன்று மூன்று மணி நேரத்திற்கு ஆன்லைன் வழியில் பொறியியல் மாணவர்களுக்கு எந்தவித குழப்பங்களின்றி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மட்டும் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அண்ணா பல்கலைகழகம் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, அந்தத் தேர்விற்குப் பதில் நடைபெறும் மறு தேர்வுக்கு வரும் 24ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.