
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் துணை கலந்தாய்வு வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி, 23-ந் தேதி வரை (சனிக்கிழமை) வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு, சான்றிதழ் பதிவேற்றம் நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது.
பொறியியல் கலந்தாய்வில் முதலில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் மற்றும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடந்தது.இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 324 பேர் சேர்ந்தனர். இதுதவிர சிறப்பு பிரிவில் உள்ள மற்றப்பிரிவினர் 473 இடங்களை தேர்வு செய்தனர். அந்தவகையில் சிறப்பு பிரிவு மூலம் 7 ஆயிரத்து 797 இடங்கள் நிரம்பின.
பொறியியல் கலந்தாய்வில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படும் என்று கலந்தாய்வை நடத்தும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் அறிவித்து இருந்தது. அதன்படி, 4 சுற்று கலந்தாய்வும் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளது.