
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.
தற்போது இந்த பெர்சிவரென்ஸ் விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேல்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் ஆகியவற்றை இதுவரை இல்லாத அளவு துல்லியமான தரத்தில் இந்த புகைப்படங்களில் காணமுடிகிறது.
பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் செயல்பாடுகளை புளோரிடாவில் உள்ள நாசா வானியலாளர் எமி வில்லியம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளின் அம்சங்களுக்கும், நமது பூமியின் நதி டெல்டாக்களில் உள்ள வடிவங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக இந்த குழு தெரிவித்துள்ளது.
புகைப்படத்தில் காணப்படும் மூன்று அடுக்குகளின் வடிவமானது, சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் என்று எமி வில்லியம்ஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.