
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியில் அங்கம் வகித்த கோவையை சேர்ந்த 14 வயது ரிதுவர்ஷினி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
போலந்தில் நடைப்பெற்ற உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
முதல்முறையாக உலக வில்வித்தை போட்டி போலந்து நாட்டில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ரிதுவர்ஷினி உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இருக்கிறார். இது இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் பெருமையாகும். ரிதுவர்ஷினிக்கும், அவரது பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று இந்திய வில்வித்தை பயிற்சியாளர்கள் இயக்குனருமான ஷிஹான் ஹூசைனி தெரிவித்துள்ளார்.
தங்கப்பதக்கம் பெற்ற ரிதுவர்ஷினி பேசுகையில், ‘சர்வதேச போட்டியில் இது தான் எனது முதல் வெற்றி. என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமின்றி நிறைய பேரின் உழைப்பும் காரணமாகும். உலக இளையோர் போட்டியில் வெற்றி பெற்றது போல் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பட்டத்தை வெல்ல ஆசைப்படுகிறேன். அரை இறுதிப்போட்டியில் இத்தாலியை வென்றோம். இறுதிப்போட்டியில் துருக்கியை வீழ்த்தினோம்’ என்றார்.