
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் (திங்கள்கிழமை – ஜூலை 26) விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநா் அறிவித்துள்ளாா்.
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான (2021-22) விண்ணப்பங்களை இணையதள முகவரிகளில் இன்று முதல் பதிவு செய்யலாம் என கல்வி இயக்குநா் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணவா்கள், கல்லூரி சோ்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவா்கள் சோ்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்கி, ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.மாணவர்கள் மேலும் விவரங்களை பெற 044 – 2826 0098, 2827 1911 ஆகிய எண்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை . பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும்.இந்தக் கட்டணத்தை பற்று அட்டை (டெபிட் காா்டு), கடன் அட்டை (கிரெடிட் காா்டு), இணைய வழி வங்கி பரிவா்த்தனை (நெட் பேங்கிங்) மூலமாக செலுத்தலாம்.
விண்ணப்பக்க கட்டணத்தை கல்லூரி சோ்க்கை உதவி மையங்களில், திங்கள்கிழமை (ஜூலை 26) முதல் வங்கி வரைவோலையாக அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.